வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க முயற்சி – சஜித் பிரேமதாச

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (55) நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோட்டா கோ ஹோம் உள்ளிட்டவற்றின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைத்தளங்களின் குரல்களையும் முடக்குவதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் களைப்படைந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இவை குறுகிய காலத்திற்கே.

காரணம் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை. இரு வருடங்களாக ராஜபக்ஷ சாபத்தின் அவல நிலைமையை அனுபவித்து வருகின்றோம்.

பெண்களின் சுகாதார நலன் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது எம்மை விமர்சித்தனர். இன்று கர்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மந்த போசனை அதிகரித்து வருகிறது. இரசாய உரத்தை தடை செய்து , விவசாயத்தை முழுமையாக சீரழித்து விட்டு , தற்போது விவசாயத்தில் ஈடுபடுமாறு கோருகின்றனர்.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

தற்போது சில வைத்தியசாலைகளில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிரலவுகிறது. இதே போன்று மருந்து தட்டுப்பாட்டுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனினும் இவற்றில் எதனைப் பற்றியும் பதவிகளுக்காக வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு கவலை கிடையாது. மருத்துவ தேவைகளுக்காக தூதுவர்கள் வெளிநாடு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் டொலரைப் பெற்றுக் கொள்வதற்காகவே வெளிநாடு செல்கின்றனர் என்று பொய் கூறுகின்றனர். இவ்வாறு பொய் கூறி யாரை ஏமாற்ற எண்ணுகிறீர்கள்?

இந்தியாவிலிருந்து 65 000 மெட்ரிக் தொன் யூரியா கிடைக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். அவ்வாறு அந்த உரத்தொகை கிடைக்குமானால் எதிர்வரும் இரு தினங்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உரத்தினை இறக்குமதி செய்தால் மாத்திரம் போதுமா? கிருமி நாசினிகள் , கலைக்கொள்ளிகள் நாட்டில் இருக்கின்றனவா? இவை எவையும் இல்லை என்றும் , மிகவும் நெருக்கடியாக உள்ளது என்றும் கூறுவதற்காகவே பொறுப்பினை ஏற்றனர்?

சவாலை ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும். பொறுப்பினை ஏற்றவர்கள் விவசாயிகளுக்கு உரத்தினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் , ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கி மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என்றார்.

Related Posts