திங்கள் முதல் பணிப்பகிஷ்கரிப்பு – தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில்,

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ் வண்டிகளுக்கான டீசல் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றோம்.

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை இடம்பெற்று வந்ததால், சிரமத்தை பொறுத்துக்கொண்டு சேவையில் ஈடுபட்டு வந்தோம் தற்போது பரீட்சை நிறைவடைந்திருக்கின்றது.

அதனால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ் வண்டிகளுக்கு இந்த வாரத்துக்குள் டீசல் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்காவிட்டால் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து முழுமையாக ஒதிங்கிக்கொள்வோம்.

பஸ் வண்டிகளுக்கான டீசல் பெற்றுக்கொள்ள பல நாட்கள் வரிசையில் இருக்கவேண்டி இருக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபை டிபோவில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அதற்காக முறையான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றது என்றார்.

Related Posts