இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 பேர் சபைக்கு சமுகமளிக்க வில்லை.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை, ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
இதையடுத்து இந் தத் தீர்மானம் ஜனாதி பதிக்கு அனுப்பிவைக் கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமை யில் சபை கூடியது. அதன்போது நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரதம நீதி யரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவாதத்துக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது.
ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினருக்கிடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, பிரதம நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என சபாநாயகர் அறிவித்தார்.
சுயாதீனக் குழு ஆராயும்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரேரணையை, நால்வர் அடங்கிய சுயாதீனக் குழுவொன்றினூடாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார்.
ஆளுந்தரப்பின் 116 எம்.பிக்கள் கையொப்பமிட்ட, 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது.
இந்தக் குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் 11பேர் அடங்கிய விசேட தெரிவுக்குழு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், ஆளுந்தப்பின் சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஐ.தே.கவில் இவரும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர்.
அத்துடன், தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட நாள்முதல் ஒருமாத காலத்துக்குள் இந்தத் தெரிவுக்குழு தமது விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சபாநாயகரால் பணிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர், நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல்முதல் ஆஜரானார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்காக தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூற அவர் கால அவகாசம் கோரினார். அதையடுத்து தெரிவுக்குழுவால் அவருக்கு இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் நான்காம் திகதி இரண்டாவது தடவையாக தெரிவுக்குழு முன்னிலையில் சமுகமளித்த பிரதம நீதியரசர், தெரிவுக்குழு விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறவில்லை என்றும், தெரிவுக்குழுவின் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகளில் இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்தனர் என்றும் தெரிவித்து தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தார்.
டிசெம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற தெரிவுக்குழு விசாணையில், பிரதம நீதியரசர் கலந்துகொள்ளவில்லை. அதனையடுத்து, குற்றவியல் பிரேரணையை தெரிவுக்குழு விசாரித்து வந்தபோது, ஆளுந்தரப்பினரால் விசாரணைகள் பக்கச்சார்பாக நடத்தப்படுகின்றன என்று தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நால்வரும் விசாரணை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
தன்னிச்சையான அறிக்கை
அதன்பின்னர், ஆளுந்தரப்பின் 7 தெரிவுக்குழுப் பிரதிநிதிகளும் குற்றவியல் பிரேரணை தொடர்பில் தன்னிச்சையாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைத் தயாரித்து, பிரதம நீதியரசர் குற்றவாளி என்று டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்தது.
பிரதம நீதியரசருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்களுள் 5 ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆளுந்தரப்பின் தெரிவுக்குழு பிரதிநிதிகள், அவற்றுள் 1, 3, 5 ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன என்றும் 2,5 ஆகியன நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்தனர்.
இந்தத் தெரிவுக்குழு விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறுகோரி 7 ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், தெரிவுக்குழு அறிக்கையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி, டிசம்பர் 19ஆம் திகதி பிரதம நீதியரசர் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 21ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியதுடன், சபாநாயகர் உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களை கடந்த 3ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுத்தது.
கடந்த 3ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகினர். நிலையியல் கட்டளைகள், சட்டங்கள் அல்ல என்றும், தெரிவுக்குழுவும் அதன் அறிக்கையும் சட்ட வலுவற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தெரிவுக்குழு அறிக்கையை
இரத்துச் செய்யத் தீர்ப்பு
இதேவேளை, பிரதம நீதியரசரின் ரிட் மனு மீதான விசாரணையை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. இதன்படி குறித்த மனுவை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், தெரிவுகுழு அறிக்கையை இரத்து செய்யுமாறு தீர்ப்பளித்தது.
இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பினையும், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாது நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விட்டு பிரேரணையை நிறைவேற்றப்பட்டுள்ளது.