சண்டிலிப்பாயில் வாள்வெட்டு!! கண்டுக்காமல் நின்ற பொலிஸார்!!!

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு மற்றொரு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது அளவெட்டி கனி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.

தலையில் படுகாயமடைந்த அளவெட்டிக் கனி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வாள்வெட்டுக் கும்பல் தப்பித்து சங்குவேலி பகுதியினால் பயணித்த போதும் வீதியில் கடமையிலிருந்த மானிப்பாய் பொலிஸார் கண்டுக்காமல் நின்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Posts