முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி இன்றையதினம் முள்ளிவாய்க்காலை வந்தடையும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.
நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான நாளைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையக்கூடியவாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அவ்விரு மாகாணங்களிலுமிருந்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.
அதன்படி இப்பேரணி கிழக்கு மாகாணத்திலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாகாணத்திலிருந்து நேற்று திங்கட்கிழமையும் ஆரம்பமானது.
கிழக்கு மாகாணப் பேரணி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்தும் வடக்கு மாகாணப் பேரணி வல்வெட்டித்துறை அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முறை, களுவாஞ்சிக்குடி ஊடாக திருகோணமலை நோக்கிச்சென்று, அங்கிருந்து முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலை வந்தடையும்.
அதேபோன்று வல்வெட்டித்துறை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி பொலிகண்டி, பருத்தித்துறை, புத்தூர் ஊடாகப் பயணித்து, நல்லூர் கந்தன் ஆலயவாசலை அடைந்து, பின்னர் அங்கிருந்து தென்மராட்சி, பரந்தன் ஊடாக முள்ளிவாய்க்காலை வந்தடையும்.
இந்தப் பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.