2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்கம் ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் மேலும் பல தொழிற்சங்கங்களுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்த ராஜகிரிய சந்தியில் ஒன்று கூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய 24 மணித்தியால ரயில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் (RTUA) இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரம்பிக்கும் பணிப்புறக்கணிப்பு நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

“40க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கைகோர்க்கும். 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும். வேலைநிறுத்தத்தின் போது, ​​நாடு முழுவதும் ரயில்கள் இயங்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு தழுவிய ஹர்த்தாலில் ஈடுபடப் போவதில்லை என்றும், அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஹர்த்தாலில் கலந்து கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (IPPBOA) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 20 முதல் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க போதுமான டீசலை வழங்கும் அதேவேளை, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) முன்னதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு பல அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆதரவளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக ஊடகப் பிரிவின் தலைவர் நேற்று தெரிவித்தார்.

Related Posts