வடமாகாணத்தின் கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சூறையாடி வருவதாகத் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாதுகாப்புத் தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடனே இந்த வளச் சுரண்டல் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் துதுவர் திருமதி கிறிஸ்ரின் றொபின்ஷன் நேற்று மதியம் 12 மணியளவில் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.
இதன்போது வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கும் போதே தவரட்ணம் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரான்ஸ் தூதுவருக்கு மேலும் விளக்கமளித்த அவர்,
இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலம் தென்னிலங்கை மீனவர்கள் எமது பகுதிகளின் வளங்களை முற்றாகச் சுரண்டி வருகின்றனர். இதனால் வடபகுதியில் மீன் வளம் முற்றாக அழிக்கப்படுகிறது.
வடபகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பாவிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதிக் கடலில் சுதந்திரமாக தடைசெய்யப்பட்ட தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்பது புரியாத புதிராக இருக்கிறது எனவும் தவரட்ணம் கூட்டிக்காட்டினார்.
இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களுடைய தொடர்ச்சியான அத்துமீறல்களால் வடபகுதி கடல்வளம் முற்றாக அழிக்கப்படும் அதேவேளை, கற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களையும் இழந்துள்ளனர்.
இந்திய மீனவர்களுடைய இழுவைப் படகுத் தொழிலானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத கொடுரத் தொழிலாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலைய தொருமானால் இன்னும் சிறிது காலத்திற்குள் இலங்கையின் வடபகுதியில் கடற்றொழில் என்ற ஒன்று இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடும் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக இந்தியத் துணைத்தூதுவர் மற்றும் அரச அதிபர் ஆயியோர் ஊடாக மகஜர்கள் பேச்சுவார்த்தைகள் போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை இபபிரச்சினைகளுக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் உரிய தரப்பினர் மேற்கொள்ளவில்லை.
எல்லை தாண்டும் இந்நிய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் இலங்கைக் கடற்படை வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கையாக ஒரு சில படகுகளை மட்டும் பிடித்துவிட்டு மீளவும் நீதிமன்றங்களின் ஊடாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கின்றனர் எனவும் பிரான்ஸ் துதரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்துக்களை செவிமடுத்த பிரான்ஸ் தூதுவர், இலங்கையின் வடபகுதி மீனவர்கள் யுத்த காலத்திலும் அதன் பிற்பட்ட காலப் பகுதியிலும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பிரான்ஸ் அரசு போதிய கவனம் செலுத்தி வருகிறது.
வடபகுதி மீனவர்கள் தொடர்ந்து எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பிரானஸ் அரசுக்கு அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளேன் எனத் தெரிவித்தார்.