பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும்.

அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினர் சிறைக்கைதிகளின் உடைகளோடு காணப்பட்டார்கள். அதை ஒழுங்கு படுத்தியது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “குரலற்றவர்களின் குரல்” என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு அதற்கு முதல்நாள் யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது. தாம் இவ்வாறு ஒரு பொங்கலை வித்தியாசமாக நடத்த இருப்பதனை அறிவித்தது. அவ்வமைப்பு தமது கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களின் ஆதரவை கேட்டிருந்தது. எனினும் முத்த வெளியில் அந்த நிகழ்வில் மிகச்சில அரசியல்வாதிகளே பங்குபற்றியிருந்தார்கள். யாழ் நகரபிதா மணிவண்ணன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், சிவாஜிலிங்கம், பார்த்திபன் உள்ளிட்ட மிகச்சில அரசியல்வாதிகளே அங்கே வந்திருந்தார்கள். தவிர சமயப் பெரியார்களும் வந்திருந்தார்கள். மிகக் கைக்கடக்கமான நபர்களோடு அந்த வித்தியாசமான பொங்கல் செய்யப்பட்டது. அது ஒரு கவன ஈர்ப்பு முயற்சி.

அரசியலில் கவனயீர்ப்பு போராட்டம் என்பது பெருமளவுக்கு ஒரு சடங்காக மாறிவிட்டது. நகர மையத்தில் வீதியின் இரு மருங்கிலும் சுலோக அட்டைகளை தாங்கியபடி நிற்பதே நமது அரசியல்வாதிகளுக்கு கவன ஈர்ப்பாக தெரிகிறது. அது அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வருவதற்கும் அப்பால் பெருமளவுக்கு பொது சனங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. எனவே அரசியல் கைதிகளுக்கான போராட்டத்தை வித்தியாசமான விதத்தில், இதற்கு முன் யாரும் செய்திராத விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே மேற்படி விடுதலைப் பொங்கல் ஆகும்.எனினும் வழமையான கவனயீர்ப்பு போராட்டங்களைப் போலவே அந்நிகழ்வு அடுத்தநாள் ஊடகங்களில் செய்திகளாக வந்ததோடு சரி.

அதேசமயம் அதே நாளில் அதாவது பொங்கலுக்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் தோறும் சனங்கள் நிரம்பி வழிந்தார்கள். மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் ஒரு நாடா இது என்று கேட்குமளவுக்கு ஜனங்கள் நகரங்களில் பிதுங்கி வழிந்தார்கள். சனங்களுக்கு கொண்டாட்டங்கள் தேவையாக இருக்கின்றன. அவர்கள் கொண்டாடும் மனநிலையோடு இருக்கிறார்கள். அது தவறல்ல. மக்கள் கொண்டாடட்டும். சந்தோஷமாக இருக்கட்டும். அதேநேரம் தங்களுக்காக போராட புறப்பட்டு சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் தரப்புக்களோடு மக்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு அரசியல் கைதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான போராட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கு வித்தியாசமான கவனயீர்ப்பு போராட்டங்கள் தேவை. வழமையான, பாரம்பரியமான கவனயீர்ப்பு போராட்டங்கள் இப்போதுள்ள அவசர உலகில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இல்லை.இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் அரசியல் கைதிகளுக்காக போராடும் அமைப்பு அப்படி ஒரு பொங்கலை செய்தது.

இவ்வாறு வித்தியாசமாக கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு பொங்கலை ஒழுங்குபடுத்துமாறு அவர்களுக்கு கடந்த ஆண்டிலேயே ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிகிறது.அரசியல் கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் மட்டும் போராடும் ஒரு துர்ப்பாக்கியச் சூழலில் கைதிகளுக்கான போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று சிந்தித்த செயற்பாட்டாளர்கள் சிலர் மேற்கண்ட ஆலோசனைகளை வழங்கியதாக தெரியவருகிறது.அவ்வாறு ஆலோசனை வழங்கிய செயற்பாட்டாளர்கள் வேறு சில ஆலோசனைகளையும் கூறியதாக தெரிய வருகிறது.

அவற்றின்படி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் கைதிகளின் உடைகளோடும் சிறையில் கைதிகள் பயன்படுத்தும் சாப்பாட்டு கோப்பைகளோடும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தால் என்ன என்று கேட்கப்பட்டது. அதோடு நீதிமன்றங்களில் அரசியல் செயற்பாட்டாளர்களாக காணப்படும் சட்டவாளர்களும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான சட்டவாளர்களும் ஒருநாள் கைதிகளின் உடையோடு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை செய்யலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.இவ்வாறான வித்தியாசமான போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம், வெளி உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களின் காலத்தில் பொது மக்களின் கவனத்தையும் வெளி நாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு புதிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதிகம் கற்பனைத்திறன் தேவையாக இருக்கிறது. அதிர்ச்சியூட்டும் விதத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் வடபகுதி தலைநகரங்களில் ஒன்று என்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. நகரத்தின் பிரதான சாலைகளில் காணப்பட்ட பள்ளங்களை அடைக்குமாறு நகரசபை நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வற்புறுத்தி சலிப்படைந்த ஒரு செயற்பாட்டாளர், நகர சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கு வித்தியாசமாக சிந்தித்தார். ஒரு மழைநாளில் சாலையின் பள்ளங்களில் தேங்கி நின்ற நீரில் மினுங்கும் வர்ண கலவைகளை கலந்து விட்டார். அதன்பின் அங்கே கடல்வாழ் உயிர்களின் பொம்மைகளை வைத்தார். இது ஊடகங்களின் கவனத்தையும் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளின் கவனத்தையும் உடனடியாக கவர்ந்தது. அடுத்த சில நாட்களுக்குள் வீதிகள் செப்பனிடப்பட்டன.

இதைப்போலவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்களின் ஆடைகளை பகிரங்கமாக கொடிகளில் தொங்கவிட்டு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தார்கள்.

இலங்கைத் தீவிலும் பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கியதும் இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களின் ஜனாசா அடக்க உரிமையை மறுத்தது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக கபன் துணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது ஒரு வித்தியாசமான படைப்பு திறன்மிக்க போராட்டம். அது அதன் அடுத்த கட்டத்துக்கு வளரவில்லை. அந்த வெற்றிடம் காரணமாகத்தான் முஸ்லிம்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டத்தில் தமது பங்களிப்பைச் செலுத்தினார்கள்.

மேற்கண்ட அனைத்து உதாரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தகவல் யுகத்தில் பொது சனங்களின் கவனத்தையும் வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு கவனயீர்ப்பு போராட்டங்கள் வித்தியாசமாகவும் படைப்புத் திறனோடும் வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு சிந்தித்து வடிவமைக்கப்பட்டதே விடுதலைப் பொங்கல் நிகழ்வு ஆகும்.ஆனால் அது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. வழமையாக கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஏனைய போராட்டங்களிலும் பங்கு பற்றும் ஒரு தொகுதி அரசியல்வாதிகள் கூட அதில் காணப்படவில்லை.

அதை ஒழுங்கு படுத்திய குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் போதிய வளங்களும் இல்லை, ஆட்களும் இல்லை. விடுதலைப் பொங்கலுக்கு முதல் நாள் அவர்கள் ஊடகச் சந்திப்புக்காக யாழ் ஊடக அமையத்திற்கு வந்திருந்த வேலை அங்கே ஒரு தமிழ் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரை கண்டிருக்கிறார்கள். அவரோடு தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக உரையாட முற்பட்ட வேளை அவர் தங்களை பொருட்படுத்தவில்லை என்றும் மனம் நொந்து சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட சில அரசியல் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றபோது அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார் என்பதை நினைவூட்டினார்கள். அச்சந்திப்பின்போது சம்பந்தர் தன்னை சந்திக்க வந்த முன்னாள் கைதிகளை முகம் கொடுத்து பார்க்காமல் ஒரு பேப்பரை வாசித்தபடி அவர்களோடு உரையாடினார். “திறப்பு என்னிடம் இல்லை” என்றும் கூறினார்.

ஆனால் இதுபோன்ற போராட்டங்களை புதிதாக சிந்திக்க வேண்டியதும் வழிநடத்த வேண்டியதும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் பொறுப்பு. கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும்தான் போராடுவது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையைக் காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தான் போராட வேண்டியிருப்பது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையை காட்டுகிறது.

இந்த லட்சணத்தில் போராடுவோம் போராடுவோம் என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது யார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட மக்கள்தான். அவர்களுடன் நிற்பது யார் என்று பார்த்தால் மிகச் சில அரசியல்வாதிகள்தான்.

-நிலாந்தன்-

Related Posts