முல்லைத்தீவு, மூங்கிலாறில் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
திருகோணமலையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற அவர், கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
கடந்த 15ஆம் திகதி அவர் காணாமற்போனார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிறுமி வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பற்றைக் காணி ஒன்றில் நேற்று 19ஆம் திகதி சடலமாகக் மீட்கப்பட்டார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இடம்பெற்றது.
சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உள்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.