பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அரிசி உள்ளிட்ட 50 அத்தியாவ சிய பொருட்களை சதொச மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப்பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையை விட குறைவான விலையிலேயே சதொச மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நேற்று முதல் நாட்டரிசி ஒரு கிலோவை 99 ரூபா 50 சதத்திற்கும் சம்பா அரிசி ஒரு கிலோவை 130 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அந்த அரிசியை 5 கிலோ வரை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சீனி, பருப்பு உள்ளிட்ட 50 பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதனைக் குறைப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
நான் மக்களுக்கு பொய் கூறி என்னை சிறுமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. விலைகளை என்னால் குறைக்க முடியும் என்றால் நான் குறைக்காமல் இருப்பேனா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.