அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள் – சமையல் எரிவாயு விநியோகத்திற்கு தடை!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய சம்பவங்கள் பதிவாகாதமையால், தமது விற்பனை மற்றும் விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெறுமென அந்த நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.வேகபிட்டிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்த வருடத்தின் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts