நாட்டில் 5 மாவட்டங்களில் கொவிட்-19 கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் நேற்று ஊடகங்களிடம் கூறினார்.
சுகாதார நெறிமுறைகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவுமத் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தற்போது தினசரி 700 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் 20 ஆக காணப்படுகிறது. இது சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளை எழுப்புகிறது.
எனவே, நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை மக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.