மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை ஞாயிறன்று நீக்கம்- தடுப்பூசி பெறாதவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் பணிப்பு

தற்போதைய மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என்று அறவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை கோவிட்-19 ஒழிப்புச் செயலணியுடன் காணொளி தொழில்நுட்பம் ஏடான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் அதிபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பொது இடங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.

தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விதிகள் உள்ளதை சுட்டிக்காட்டி, சட்ட மா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி அவதானித்தார்.

கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு வீதம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தொலைதூர பிரதேசங்களில் தடுப்பூசி போடுவதற்காக நடமாடும் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தடுப்பூசி தொடர்பில் பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பரப்புரைகளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தினர்.

தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் உள்பட பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை உடனடியாக அவதானிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலமையை கட்டுப்படுத்தி நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சகல துறைகளுடனும் ஒருங்கிணைந்து கோவிட்-19 ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தினார்.

கோரோனாவால் சவாலுக்கு உள்ளான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய துறையாக சுற்றுலாத்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் புதிய தீர்மானங்கள் பலவற்றை விரைவில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். சுகாதார

வல்லுநர்களின் ஆலோசனைக்கு உட்பட்டு அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்கால சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. சுகாதாரத் துறை அவர்களை வாழும் குமிழிக்குள் (Bio Zone) வைத்து அவர்களுக்கு வசதி செய்து தரக்கூடிய ஆற்றல் கொண்டது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமையவுள்ள எல்பிஎல் போட்டிகள் உட்பட இன்னும் பல போட்டிகளை பார்வையிட பார்வையாளர்களை இலங்கைக்கு வர அனுமதிக்குமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார். .

Related Posts