உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை), குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள், ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று, அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது, இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி பொலிஸாரை திரும்பி அனுப்பியுள்ளார்.

Related Posts