தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
“வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். அவர்களில் முதலாவது டோஸ் தடுப்பூசி 5 இலட்சத்து 58 ஆயிரத்து 131 பேருக்கு இன்று வரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று வரை இரண்டாவது கட்ட தடுப்பூசி இரண்டு இலட்சத்து 94 ஆயிரத்து அறுபத்தி ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றன.
நேற்று முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அனைவரும் இந்த தடுப்பூசியை பெறுவது அவசியமாகும். இன்றுவரை தடுப்பூசியைப் பெறாதவர்கள் அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுங்கள்.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் சிலர் அலட்சியமாக செயற்படுகின்றார்கள் அதாவது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றார்கள்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக இறுக்கமாக பின்பற்ற வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
அத்தோடு இயலுமானவரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும். கட்டாயமாக முககவசம் அணிதல் வேண்டும்”என அவர் மேலும் தெரிவித்தார்.