முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இதுவரை 20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றன.
இந்த நிலையில் 15 சடலங்கள் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் வைத்தியசாலையில் மேலதிகமாக சடலங்களை வைத்திருக்காமல் எரியூட்டும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். நேற்று இரண்டு சடலங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எரியூட்டல் நிலையங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதுதவிர யாழ்மாவட்டத்தில் உள்ள எரியூட்டும் நிலையத்திலும் சடலங்களை எரியூட்ட கிரமமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.
தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள எரியூட்டல் நிலையங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்.
மரணமடைந்தவரின் உறவினர்கள் சிலரை எரியூட்டும் பகுதிக்கு அனுப்புவதுடன் உரிய முறையில் உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பலை கையளிக்கும் விடயத்தில் நாங்கள் சரியான முறையில் செயற்படுவோம்.
இதனிடையே கொரோனா சிகிச்சைகள் தொடர்பில் தெரிவிக்கும்போது யாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு விடுதிகளில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கின்றது. குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும். இவ்வாறு சில நாட்கள் பிந்தி வருகின்றமையால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
அதிகளவான காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.