யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா கூறியுள்ளதாவது, “நேற்று நள்ளிரவு 11 மணியளவில், இராணுவ இலக்க தகடுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர்கள், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு நான் சென்றபோது, என்னுடனும் அவர்கள் முரண்பட்டனர்.

இதனால் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்த வேளையில், குறித்த அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொன்னாலை மாட்டு வண்டி திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அராலியில் இருந்து வந்தவர்களால் மாட்டு வண்டி சவாரி நடத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்தியமையினால் இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது.

குறித்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அந்த சம்பவத்தின் பின்னணியில், ஒரு தரப்பினரின் ஏவுதலில் இராணுவத்தினர் மற்றைய தரப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Posts