உடன் பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பியுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரித்துள்ளனர்.

அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுள்ள கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமான என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிலைமைகள் மற்றும் கொவிட் தொற்றாளர்களின் தினசரி உயர்வினால் சுகாதாரத்துறை பாரிய இக்காட்டான நிலையில் உள்ளதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கப்படாவிட்டால், வைத்தியசாலைகளில் வசதிகள் இல்லாது நோயாளர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் இக்கட்டான நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அடுத்த 14 நாட்களுக்கு புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பயணக் கட்டுப்பாடுகள் தாமதமின்றி விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் நேற்றைய தினம் 2,956 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 329,994 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts