யாழில் வழிபாட்டுத் தலங்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கட்டாயமாக பின்பற்றவேண்டிய சுகாதார விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வழிபாட்டு தலங்களுக்கான கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்

வழிபாட்டிடங்களில் போதியளவில் கை கழுவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகை தரும் அனைவரும் கை கழுவுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வழிபாட்டிடங்களில் வருகை தரும் அனைவரும் சரியான முறையில் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

வழிபாட்டிடங்களில் சமூக இடைவெளி (தனி நபர்களுக்கிடையேயான இடைவெளி 1 மீற்றர் ) பேணுவதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

கை கழுவுதல், முகக்கவசம் அணிதலை உறுதிப்படுத்த குறிப்பிட்ட ஒருவரை நியமிக்க வேண்டும்.

வழிபாட்டிடங்களினுள் வழிபாட்டு நடவடிக்கைகளில் அதிகூடிய அளவில் ஒரே நேரத்தில் 100 பேர் மாத்திரமே ஒன்று கூடமுடியும். இந்த அதி கூடிய எண்ணிக்கையினை பிரதேச அபாய நிலை, வழிபாட்டிடத்தின் அளவின் அடிப்படையில் சமூக இடைவெளியுடன் (தனி நபர்களுக்கிடையேயான இடைவெளி 1 மீற்றர்) இருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை என்பவனவற்றின் அடிப்படையில் சுகாதார மருத்துவ அதிகாரி மேலும் குறைக்க முடியும்.

வெளி வீதியில் எதுவிதமான திருவிழாக்கள், பக்தர்கள் ஒன்று கூடுதல், சுவாமி உலாவருதல், அன்னதான நிகழ்வுகள், தண்ணீர் பந்தல்கள் மற்றும் காவடி எடுத்தல் போன்ற நிகழ்வுகளை நடாத்த முடியாது.

பக்தர்களுக்கு வீபூதி பூசி விடுதல் மற்றும் பிரசாதம் வழங்குதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தல வளாகத்தினுள்ளோ வெளியிலோ தேவையற்ற விதத்தில் பொது மக்கள் கூடி நிற்றல் ஆகாது.
வழிபாட்டு தலங்களிற்கு வருகை தருவோரின் பெயர் விவரங்கள் கட்டாயம் பேணப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளை கடைப்பிடிப்பதனை வழிபாட்டு தலத்திற்கான நிர்வாகம், மதகுருமார்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழாக்களுக்கான கோவிட் -19 பாதுகாப்பு நடைமுறைகள்

இவ் வைபவங்களை மண்டபங்களிலோ வீட்டிலோ நடாத்தும் போது பின்வரும் விடையங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ் வைபவங்களுக்கான அனுமதியினை தங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ் வைபவங்களின்போது போதியளவில் கை கழுவும் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இவ் வைபவங்களுக்கு வருகை தரும் அனைவரும் சரியான முறையில் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

இவ் வைபவங்களின்போது சமூக இடைவெளி (தனி நபர்களுக்கிடையேயான இடைவெளி 1 மீற்றர் ) பேணுவதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ் வைபவங்களின்போது கை கழுவுதல், முகக்கவசம் அணிதலை உறுதிப்படுத்த குறிப்பிட்ட ஒருவரை நியமிக்க வேண்டும்.

இவ் வைபவங்களில் பங்குபற்ற கூடிய அதி கூடிய நபர்களின் எண்ணிக்கையினை பிரதேச அபாய நிலை, மண்டபத்தின் அளவின் அடிப்படையில் சமூக இடைவெளியுடன் (தனி நபர்களுக்கிடையேயான இடைவெளி 1 மீற்றர) இருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை என்பவனவற்றின் அடிப்படையில் சுகாதார மருத்துவ அதிகாரி தீர்மானிப்பர்.

இவ் வைபவங்களில் பங்குபற்றுவோரின் பெயர் விவரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டச் செயலாளர்,
யாழ்ப்பாணம்.

Related Posts