வார இறுதி விடுமுறை நாள்களில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் திட்டமில்லை

வார இறுதி நாள்களில் நீண்ட விடுமுறை உள்ள போதிலும் நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று கோவிட்- 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே இன்னும் நடைமுறையில் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட்-19 மற்றொரு கொத்தணியைத் தீர்மானிப்பதில் வரவிருக்கும் வார இறுதி விடுமுறை நாள்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேற முயன்ற 261 ​​பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாள்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts