கோவிட்-19 வைரஸ் டெல்டா திரிபு அடுத்த சில நாள்களில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் ஊடகத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்ததாவது;
அரசும் பொதுமக்களும் நிலமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறினால் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும்.
உலகெங்கிலும் உள்ள போக்கைக் கண்டுகொள்ளலாம். இலங்கை ஒரு சிறிய நாடு எனப் புறக்கணிக்க முடியாது.
டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறினால், முந்தைய கொத்தணிகளைவிட இலங்கை மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்.
இதுபோன்ற பேரழிவைத் தவிர்க்க அரசு மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினசரி அறிக்கை செய்யப்படும் கோவிட்-19 நோயாளிகளின் இறப்புகள் குறையவில்லை. இருப்பினும் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் தினசரி வீழ்ச்சி காணப்படுகிறது.
வழங்கப்பட்ட பல சுற்றறிக்கைகள் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பதிலாக விரைவான அன்டிஜன் சோதனைகளை நடத்துவதே தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு காரணம்.
இருப்பினும் தினமும் 30-50 நபர்கள் கோவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றனர்.
டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறினால், நோய்த்தொற்று விகிதம் கடுமையாக அதிகரிக்கும், அதே நேரத்தில் அதிகமான குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் – என்றார்.