யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 கோடி ரூபா செலவில் இந்திய கலாசார நிலையத்தை கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்த கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டதால் அவரே திறப்பு விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் அவரே இந்தக் கட்டடத்தை திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ‘சிலோன் ருடே’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டதும் இந்தியப் பிரதமர் மோடியே இதனை திறந்து வைக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த வருடம் விசேட அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலாசார நிலையத்தை பிரதமர் மோடி வருகை தந்து திறந்து வைப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அது தொடர்பான விபரம் அறிவிக்கப்படுமெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ‘சிலோன் ருடே’ க்கு தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் இடம்பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.