பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மணமக்கள் குடும்பத்தினர் உட்பட திருமணத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தி இருந்தனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தி இருந்த 78 பேருக்கு கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் சுகாதார பிரிவினரிடம் திருமணத்திற்கான அனுமதியினை மணமகனே பெற்றிருந்தமையால், மணமகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மணமகன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, மணமகனை நீதவான் கடுமையாக எச்சரித்து, 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.
இதேவேளை மணமகனின் சகோதரர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், சுகாதார பிரிவினரின் அனுமதிகள் இன்றி வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் தொடர்பிலான தகவல்களையும் சுகாதார பிரிவினருக்கு வழங்கி அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு நீதவான் அறிவுறுத்தி இருந்தார்.