யாழில் நேற்றையதினம் 20 பேருக்கு கொரோனோ!! – இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சியில் 7 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் என 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் , யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேருக்கும் , தெல்லிப்பழை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கும் , சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கும் , சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்குமாக யாழில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற 7 பேருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு முதியவர்கள் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர் யாழ்.றோட் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்.

இதன்மூலம் கொவிட்-19 நோயினால் யாழ்ப்பாணத்தில் 21 போ் உள்ளடங்கலாக வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Related Posts