கோவிட் -19 தடுப்பூசியை யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? – மருத்துவ வல்லுநர் குமணன் விளக்கம்

பேராசிரியர். தி.குமணன்
பொது மருத்துவ வல்லுநர்
மருத்துவத் துறை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.

கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது.

அண்மையில் புதுடில்லியின் பொது மருத்துவ வல்லுநர்களின் அமையம் துறைசார்ந்த வல்லுநர்களுடன் நடத்திய நிகழ்நிலை கருத்தரங்கில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசி பற்றிய கருத்துக்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

அங்கீகரிக்கப்பட்ட எல்லா வகையான தடுப்பூசிகளுமே (Pfizer, Moderna, Covishield and Covaxin ) நூற்றுக்கு நூறு வீதம் கோவிட்டால் உண்டாகும் உயிரிழப்பை தடுக்கும். மிக மோசமான கோவிட்-19 தாக்கத்தை மிக வினைத்திறனுடனும் வீரியம் குறைந்த நோயை குறைந்த அளவிலும் (60-95 சதவீதம்) கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த தடுப்பூசிகளுக்கு உண்டு. ஆகவே இதன் நோய் கட்டுப்படுத்தும் திறனை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை.

எல்லா தடுப்பூசிகளுமே மிக தீவிரமான நோயை வினைத்திறனுடன் கட்டுப்படுத்துவதனால் பெரியளவில் ஒரு சமூகத்திற்கு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் மனித குலத்தை இந்த தடுப்பூசி அழிவிலிருந்து காக்கும்! இதனால் ஒவ்வொருவரும் இந்த தடுப்பூசியை பெறுவதற்கு முன்னிற்க வேண்டும் அல்லது ஊக்குவிக்கப்படவேண்டும்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10,000 கார்ப்பமான பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டது. அதன் பின் 3 மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கர்ப்பமான பெண்களுக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, செயற்கை றப்பர் (latex) ஒவ்வாமை, முன்னைய தடுப்பூசிகள் ஒவ்வாமை போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களும் இத்தடுப்பூசியை பாதுகாப்பாக ஏற்றிக்கொள்ளலாம்.

முன்னெப்போதாவது மிக பாரதூரமான ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு (ஊசிகள் ஏற்றபட்டு குணப்படுத்தப்பட்ட) Anaphylaxis என்ற ஒவ்வாமை தன்மையுடையவர்களுக்கு இத்தடுப்பூசி உகந்ததல்ல, இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கும் 4-6 வாரங்களின் பின்பு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

ஏதாவது பாரதூரமான நோய்த்தொற்று அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அந்நோயிலிருந்து தேறி 4-10 வாரங்களின் பின்பு இத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளர்கள் உணவை உட்கொண்டபின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Prednisolone (Steroids) மாத்திரைகளை உள்ளெடுப்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன் அளவை 7.5mg/day அளவுக்கு குறைத்த பின் 6 கிழமைகளில் தடுப்பூசியைப் பெறலாம். அல்லாவிடில் தடுப்பூசியின் முழுமையான நோயெதிர்ப்பு தன்மையை பெற முடியாது.

ஆஸ்துமா ((Asthma) நோயாளர்கள் அவர்கள் பாவிக்கும் inhalers (pumps) நிறுத்த தேவையில்லை.

தும்மல், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை (Eczema) நோயுள்ளவர்கள் தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு தன்மையை குறைக்கும் வாதம் மற்றும் பிற நோய்கள் சம்மந்தமான மாத்திரைகளில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி அம்மாத்திரைகளை 2 கிழமைக்கு முன் நிறுத்த வேண்டும். தடுப்பூசி ஏற்றியபின் இரண்டு வாரங்களில் மாத்திரைகளை மீள ஆரம்பிக்கலாம்.

குருதிப் புற்றுநோய் மற்றும் என்பு மச்சை மாற்று சிகிச்சை செய்தவர்கள் ஆக குறைந்தது 3 மாதங்களுக்கு பொறுத்திருக்க வேண்டும்.

சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் அதற்கு ஆகக் குறைந்தது 02 கிழமைக்கு முன்னதாக தடுப்பூசியைப் பெற்று தங்களது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.

கோவிட்டினால் ஏற்படும் உயிரிழப்பு வீதம் முதியோர்களில் மிக அதிகமாதலால் வயது முதிர்ந்தவர்கள் (எவ்வயதாயினும்) தடுப்பூசியை பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் அல்லது உறுதி செய்ய வேண்டும்.

அதீத ஞாபகமறதி, பாரிசவாதம் மற்றும் வயது முதிர்வினால் ஏற்படும் மூளை சம்மந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம்.

நீண்ட நாள்பட்ட சிறுநீரக நோய்(CKO) இதய பலவீனம் (heart failure), ஈரல் செயலிழப்பு (chronic liver discus) போன்ற முக்கிய அங்கங்களின் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் தடுப்பூசியின் வினைத்திறன் குறைவாகவே இருக்கும்.

அஸ்பிரின் (Aspirin) குளோபிடோகிரில் ((Clopidogrel) போன்ற குருதியுறைதலைத் தடுக்கும் மாத்திரைகளை உள்ளெடுப்போர் அவற்றை நிறுத்தத் தேவையில்லை.

குருதியுறையாமல் கொடுக்கும் மாத்திரைகளை (உதாரணம்:- warfarin) உள்ளெடுப்போரும் அவற்றை நிறுத்துவது அவசியமில்லை.

உயர் குருதியமுக்கம், உயர் கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோய்கள் உள்ளவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி மிக பாதுகாப்பானது.

நிறைவாக முக்கியமான விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனால் அந்நோய் தடுப்பூசி பெற்றவர்களுக்கு கோவிட்தாக்கம் ஏற்படுவதில்லை என்ற ஒரு தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உள்ளது.

“தடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்” என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்பதனையும் கவனத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் முக கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளின் சுத்தம் என்பவற்றை பேணி மனித குல அழிவை தடுப்போம்.

Related Posts