ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஊடகத்துறைப் பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகங்கள் மீது எந்தவொரு அடக்குமுறையையும் கையாளவில்லை. ஆனால், அவர்களை எனக்குக் கையாளத் தெரியும் என்ற தோரணையில் சொல்லியிருக்கிறார். இது ஊடகங்களைப் பயப்படுத்தும் ஒரு செயற்பாடாகாவே நாங்கள் காண்கின்றோம்.

முன்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலே பல ஊடகவியலாளர்கள் மரணமடைந்துள்ளார்கள். தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். இன்னும் அதிகமானவர்கள் நாட்டை விட்டு ஓடியிருக்கிறார்கள்.

ஆகவே, ஊடக அடக்குமுறை என்றால் எனக்கு என்னவென்று தெரியும் என ஜனாதிபதி சொல்வதில் எமக்கு எவ்வித வியப்பும் இல்லை.

ஆனால், ஊடகங்களைக் கட்டுப்படுத்த, ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு எதிரான ஒரு அச்சுறுத்தலாக அவரது கருத்து இருக்கக்கூடாது.

இப்படி அச்சுறுத்தல் இல்லையென்று ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் ஊடகங்களை அடக்கும் ஒரு செயற்பாடாகவே இதை நாங்கள் கணிக்க வேண்டி ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts