இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் வெற்றிபெறவில்லை.
பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து நாம் பேச்சுகளை நடத்தியிருந்ததோடு, உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை நான் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தேன்.
ஏனெனில் சிங்கள மக்கள் எதிர்க்காத ஒரே தலைவர் என்ற காரணத்தால் அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது என்ற காரணத்தாலேயே அவ்வாறு தெரிவித்தேன்.
இதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டபோதும், இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .