வடக்குக் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசாட்சியாளரின் முக்கியமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், அவ்வாறான நடவடிக்கைகளை இழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் இவ்வாறான இனவழிப்பு நடவடிக்கைகள் மீளநிகழாமல் தடுக்கவும் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அரசு ஏற்றுக் கொள்ளவைப்பதற்கான பிரேரனையை எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து எதிர்வரும் புதன்கிழமை (17) அன்று பேரணி ஒன்றை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த
இவ்வேண்டுகோளை ஏற்று அப்பேரணிக்கு ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக்கட்சி தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எம் தமிழினத்தின், தமிழர் தேசத்தின் விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி, இளைய சமுதாயத்தின் அர்ப்பணமிக்க செயற்பாடுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு வழங்குவோம்.
சென்ற திங்களில் 03 முதல் 7ம் நாள் வரை அணிதிரண்ட மக்கள் பலத்தைப் பேணவேண்டும். பலவீனமடையவிடக்கூடாது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது முன்வைத்த மனித உரிமைப்பேரவை ஆணையாளரின் அறிக்கை மிகவும் காத்திரமானதாகும். அவ்வறிக்கையின் அடிப்படையில் இலங்கைமீது ஒரு தீர்மானம் பேரவையில் எடுக்கப்படுமானால், அதற்கு அப்பாலும் இலங்கையை சர்வதேச குற்றவியலில் விசாரனைக்குச் சிபார்சு செய்யப்படுமானால் அவை கணிசமான முன்னேற்றமாக அமையும். ஆணையாளரின் அந்த அறிக்கையை ஏற்கனவே நாம் வரவேற்றுள்ளோம்.
ஆனால் இலங்கை மீதான பேரவை ஆணையாளரின் அந்த அறிக்கையின்படி நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை எடுப்பதற்குப் போதிய பெரும்பான்மையைப் பெறவேண்டும். அதற்கான இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறுகின்றன.
2012ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது பல பாடங்களையும் அத்தீர்மானத்தை நிறைவேற்ற இராஜதந்திர யுக்திகளைக் கையாண்ட விதம் அதன் அனுபவங்களை கற்றுக்கொண்டோம்.
2015ஆம் ஆண்டு 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்டிருந்த ஆட்சி அரசியல் அரசு சந்தர்ப்பங்கள் தற்போதில்லை. தற்போதைய அரசு ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து விலகியிருக்கிறது. பேரவை ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்து நிற்கிறது. இருப்பினும் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்படக் கூடிய உச்சபட்ச தீர்மானங்களை எடுக்கக் கூடிய பெரும்பான்மையைப் பெறவேண்டும். அவற்றை வென்றெடுக்க வேண்டும். இன்றைய உடனடிப்பணி அதுதான்.
மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியதும் தேவையானதே. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றமுடியாத விதிமுறைகளுண்டு. அவற்றை நிறைவேற்றப் பாதுகாப்புச்சபையில் தீர்மானமெடுக்கப்படவேண்டியது மிகுந்த சவாலுக்குரியதாகும். அவ்வாறான சந்தர்ப்பம் உருவாக வல்லாண்மைச் சக்திகளின் இராஜதந்திரோபாய வெற்றிகள் அவசியமானவையாகும். அவ்வாறான வெற்றிகள் நீண்ட நிபுணத்துவம் நிறைந்த செயற்பாடுகளினாலேயே சாத்தியமாகும்.
அதுவரை மனித உரிமைப் பேரவையில் எடுக்கக்கூடிய பொருத்தமான உச்சபட்சத் தீர்மானங்களை நிறைவேற்றும் சந்தர்ப்பங்களை இழக்கக்கூடாது. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் தொடர வேண்டும். பாதுகாப்புச்சபையில் நாம் தீர்மானித்து நிற்கும் தீhமானங்களை நிறைவேற்றினாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது இன்னொரு பாரிய சவாலாகும். அதுவரை நடைமுறையில் இலங்கையில் தமிழர் தேசம், தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு புதிய அணுகல்முறைகளும், பொறிமுறைகளும் வேண்டும்.
இந்நிலையில் தமிழ்த் தேசமக்கள் இலங்கையிலும், சர்வதேச அரங்கிலும் ஒரே குரலில் உயர்ந்த நிபுணத்துவப் பங்களிப்புடன் ஒன்றுபட்ட கட்டமைப்பில் செயற்படத் திடசங்கற்பத்துடன் உறுதி கொள்ள வேண்டும்.
அந்த வழியில் இடம்பெறும் அனைத்து ஜனநாயகச் செயற்பாடுகளையும் ஆதரிப்பதும் ஈடுபடுவதும் இன்று வேண்டியதாகும். எனவே 17/03/2021 அன்று நடைபெறவுள்ள பல்கலை மாணவர் அழைப்பினை ஏற்று அப்பேரணி வெற்றிபெற நாமனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் – என்றுள்ளது.