40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பமான குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு வைத்தியர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குளுக்கோமா வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக செயலமர்வில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொற்ற நோய் வைத்தியர் சம்பிகா விக்ரமரசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கண் பார்வை பாதிப்பு தொடர்பில் 3 விடயங்களில் குளுக்கோமா நோய் 3 ஆம் இடம்பெறுவதாக அவர் கூறினார்.
இந்த நோயின் ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளையும் காட்டாதது இதன் விசேட அம்சமாகும் என்றும் அவர் கூறினார். நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் கண்பார்வை பாதிப்பை தவிர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் கண்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.