வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 292 பேரின் மாதிரிகள் பரிசோதனையிலேயே 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 5 பேர், நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் என்றும் மூவர் ஆசிரியையின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் இருவர் ஆசிரியையுடன் முல்லைத்தீவுக்கு சென்றுவரும் சக ஆசிரியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் பயிலும் மாணவர் என கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கொடிகாமம் பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஒருவருக்கும் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்தவர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.