தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது, வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டுமென்றார். சீ.வீ.கே.சிவஞானம் அதை ஆதரித்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நேற்று, அவரை தொடர்பு கொண்டு வினவியபோது,
“ஊடகங்கள்தான் இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தின. தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் பல விடயங்களை கலந்துரையாடினோம். மாகாணசபையை குறித்தும் கலந்துரையாடினோம். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தீர்மானங்கள் எடுக்கவில்லை. அந்த முடிவை அரசியல்குழுவிலும் எடுப்பதில்லை. அதை மத்தியகுழுவிலேயே எடுக்க வேண்டும்.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தமிழ் அரசு கட்சி மட்டும் தீர்மானிப்பதில்லை. அது குறித்து, மற்றைய இரண்டு கட்சிகளுடனும் பேசிய பின்னரே தீர்மானிப்பது வழங்கம்“ என்றார்.