பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை பலாலி வாசவிலான் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை மேற்பார்வை செய்தார்.
இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் 500 – 1000 பேர் வரையில் தங்குவதற்கான வசதிகள் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
வாசவிலான் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ள இந்த அரச கட்டிடத்தொகுதியானது, 52 வது படைப்பிரிவின் 521 வது பிரிகேட் படையினரால் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும் 52 வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ். பாதுகாப்பு படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, 521 வது பிரிகேட் தளபதி கேணல் மஹேன் செல்வாதுரே இந்த பணிகளை மேற்பார்வை செய்தார்.
புதுப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள தொலைக்காட்சி, சலவை இயந்திரங்கள் ஆகிவற்றை இராணுவ தளபதி பார்வையிட்டதுடன் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
அதனையடுத்து இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் 521பிரிகேட்டின் தளபதி கேணல் மஹேன் செல்வாதுரேயிடமிருந்து இது தொடர்பிலான மேலதிக விடயங்களை கேட்டறிந்துக்கொண்டார். மேலும் எதிர்காலத்தில் அவசர நிலைமைகளின் போது புதுபிக்கப்பட்ட இடத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் கேட்டறிந்தார். மேலும் தளபதியும் மேலதிக அபிவிருத்தி தொடர்பான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இதன்போது இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 52வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் விந்தித மஹிங்கமுவ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் குறித்த விஜயத்தில் இராணுவ தளபதியுடன் இணைந்துகொண்டனர்.