யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும் பரவ வழிவகுக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமர் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது போரில் இழந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூரும் தமிழர்களின் உரிமையைத் தடுக்கும் முயற்சி குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இந்த இடிப்பை அடித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா குறித்த நினைவுத்தூபி மீளவும் கட்டி எழுப்பப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திமுக தலைவர் எம்.கே ஸ்டாலின் மற்றும் எம்.டி.எம்.கே பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தனர்.
புதுடில்லி இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.