நீதிமன்ற அனுமதியுடன் பாழடைந்த கிணற்றிலிருந்து மனித உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று (30) இனம் காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக இன்று (31) இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன.

குறித்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த உடற்பாகங்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த நபருடைய ஒரு கை பாகங்களை காணவில்லை என அறியமுடிகிறது குறித்த நபர் அணிந்திருந்த நைலோன் சாரம் ஒன்று நிறம் தெரியாத நிலையில் காணப்படுவதோடு அவர் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிறம் கலந்த NAUTICA என பொறிக்கப்பட்ட ரீ சேட் மற்றும் பாதணிகள் காணப்படுகிறது.

குறித்த பொருட்களை கொண்டு குறித்த நபரை அடையாளம் காணக்கூடிய நபர்கள் யாரும் இருந்தால் முள்ளியவளை பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் யாரும் காணாமல் போனதாக தகவல்கள் இல்லை என முள்ளியவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதியை சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன இந்நிலையில் குறித்த உடற்பாகங்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதா என்ற சந்தேகம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் இடப்பெறும் சட்டவிரோத மரக்கடத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் வருகைதந்து மரம் அறுக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு வருகைதந்தார்களில் யாராவது கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற பாழடைந்த மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் குறித்த இடத்தில் வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட தோடு இன்று நீதிமன்றின் அனுமதியோடு குறித்த உடற்பாகங்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts