தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சு ஒருவாரகாலத்திற்குள் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கத் தவறினால் ஆறான வாரம் தமது போராட்டம் 24 மணி நேரம் இடம்பெறும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை கிளை அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டமும் அதனுடைய விளைவும்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2019ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் இடமாற்றத்திற்கு உட்படாத நிரந்தர ( End Post Consultants) நான்கு உணர்வழியியல் மருத்துவ வல்லுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்திர சிகிச்சைக் கூடங்களில் மயக்கமருந்து கொடுக்கும் கடமை, சத்திர சிகிச்சைக்கு பின்பு தீவிர கண்காணிப்பு தேவைப்படும் நோயாளர்களை (ICU Care)
பராமரிக்கும் கடமை, ஏனைய மருத்துவ விடுதிகளிலிருந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை பார்வையிடும் கடமை போன்றவற்றை மேற்கொண்டனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவினை கவனிப்பதற்கென தனியான மருத்துவ வல்லுநர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவினை கவனிக்கவேண்டிய கடமையிலிருந்து உணர்வழி மருத்துவ வல்லுநர்கள் விலகிக்கொள்ள முடிந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தி, இருதய சத்திரசிகிச்சை மற்றும் மூளை நரம்பியல் சத்திர சிகிச்சைக்கான உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் என்னும் வெற்றிடத்திற்கு விண்ணப்பித்து நியமனம் பெற்றுவந்தார். பின்பு அவர் அடுத்த வருடாந்த இடமாற்றத்தின் போது தானகவே விரும்பி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வருவதற்கு விண்ணப்பித்து அவருக்கு இங்கு இடமாற்றம் கிடைத்தது.
மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்திக்கு பதிலீடாக ஒருவர் வராமல் அவரை விடுவிக்க முடியாது எனக் கூறப்பட்டதால் அவருக்குப் பதிலீடாக உணர்வழியியல் மேற்படிப்பை நிறைவு செய்த பதில் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் ஒருவர் 19.09.2020இல் மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டார். அப்பொழுதும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த நோயாளர் அளவை காரணம் காட்டி அவரை விடுவிக்க பணிப்பாளர் மறுத்துவிட்டார்.
மட்டக்களப்பிலிருந்து இன்னொரு உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் இடமாற்றத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரவுள்ளார் என்றும் அவர் வந்தவுடன் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதாகவும் கூறினார்.
எனவே மட்டக்களப்பிலிருந்து மருத்துவ வல்லுநர் ஒருவரை விடுவிப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த மருத்துவ வல்லுநருக்கு பதிலீடாக கிளிநெச்சியிலிருந்து செல்லவேண்டிய மருத்துவ வல்லுநரை மட்டக்களப்பிற்கு செல்ல ஆவண செய்து மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளருடனும் கதைத்து முயற்சிகளை மேற்கொண்டதனால் மட்டக்களப்பிலிருந்து மருத்துவ வல்லுநர் 01.11.2020இல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.
இவ்வாறு மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்திக்கு உரிய பதிலீட்டு மருத்துவ வல்லுநரை பெற்றுக்கொடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்கியிருந்தோம்.
நாம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிகரித்த நோயாளர் எண்ணிக்கையையோ அல்லது அதிகரித்த வேலைப்பழுவினையோ சிறிதளவு கூடக் குறைத்து மதிப்பிடவில்லை. இவ்வாறு அவர்களுக்குத் தேவையான பதிலீட்டு மருத்துவ வல்லுநரை நாம் பெற்றுக்கொடுத்த பின்பும் கூட புற்று நோயாளர்களின் வலி குறைக்கின்ற சிகிச்சை ( Palliative Care), தீவிர சிகிச்சைப்பிரிவு (HDU), அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (ICU) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு தேவையான உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு விடுவிக்க மறுக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
இவ்விடயத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், தெல்லிப்பழை வைத்தியசாலை நோயாளரின் முக்கியமாக புற்றுநோயாளரின் நலனில் பாரபட்சமாக நடந்துகொள்கின்றார் என்றே கருதுகின்றோம்.
தற்போது மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து நாம் எமது சேவைப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஒருவாரகாலத்திற்கு ஒத்திவைக்கின்றோம்.
மத்திய சுகாதார அமைச்சிலிருந்து அவரை விடுவிப்பதற்குரிய கடிதம் கிடைக்காத பட்சத்தில் எமது போராட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (டிசெ.15) 24 மணிநேர போராட்டமாக விரிவாக்கப்படும்.
நன்றி
தலைவர்,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,
தெல்லிப்பழைக் கிளை,
யாழ்ப்பாணம்.