மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ். கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மருத்துவர் சிவசங்கரை அவரது மனைவியும், சில மருத்துவர்களும் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.