நாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 26,038 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 627 கொரோனா தொற்றாளர்களும் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனால் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 6,681 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 728 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 19,032 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 6,681 கொரோனா நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 433 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதனிடையே நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்பட்டது.

அதன்படி இறப்பு எண்ணிக்கையும் 129 ஆக பதிவானது.

1. கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இருதய நோய் மற்றும் நீரிழிவு காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலைமையுடன் கொவிட் 19 வைரசு தொற்று அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் மூளையின் உட்பகுதியில் இரத்தம் ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 நவம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கடுமையான பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல் நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண் நபர். 2020 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியாவுடன் சுவாசக்குழாய் செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts