கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் (திங்கட்கிழமை), கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், “கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே நாம் பாடசாலைகளையும் ஒரு வாரம் நடத்தாமல் முடக்கி வைத்து இருந்தோம். இவற்றையும் நாம் மேற்கொண்டு செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம்.
இதனடிப்படையில் எமது மாவட்டத்தில் 785 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலிலே உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 458 பேருக்கு, மாதிரிகள் பெறப்பட்டு அவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.