யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
அத்துடன், காரைநகரில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் பலருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும் முடக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்து சுகாதார மருத்துவ அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காமல், சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காத காரைநகரைச் சேர்ந்த ஒருவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளதைத் தொடர்ந்து அவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இதனால் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை.
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் காரைநகரைச் சேர்ந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேரும் உள்ளடங்குவர்.
இவர்களுக்கு செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் பலருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும் முடக்கப்படும்.
இதனால் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படுவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை- என்றுள்ளது.