“யாழ்ப்பாணம் மக்கள் சட்டங்கள், சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்வதில் சிறந்தவர்கள் என்பதை நான் நேரில் கண்டுகொள்கின்றேன். கோவிட் -19 நோய் தொற்று கட்டுப்பாட்டுகளை யாழ்ப்பாணம் மக்களே சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்” இவ்வாறு யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்த் தொற்று நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நான் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. நான் தென்பகுதியிலும் பல மாவட்டங்களில் இராணுவத்தின் உயர் பதவிகளில் கடமையாற்றியிருக்கின்றேன்.
அந்த மாவட்ட மக்களை விட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவே நான் நேரடியாக பார்க்கின்றேன்.
குறிப்பாக தற்போதைய கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் வழங்கும் போது அவற்றைப் பின்பற்றி ஒத்துழைக்கின்றனர்.
இதை நான் பெருமையாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தென்னிலங்கையில் மக்களைக் கட்டுப்படுத்துவதில் முப்படைகளும் பொலிஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலை காணப்படுகிறது.
சுகாதார நடைமுறையை தொடர்ச்சியாக பேணுவதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கோரோனா வைரஸிலிருந்து எமது மாவட்டத்தினைக் காப்பாற்ற முடியும்.
சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடை முறைகளை மக்கள் கடைப்பிடிப்பதனால் எமது மக்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்ற முடியும் .
எனவே யாழ்ப்பாண மக்கள் குறித்த சுகாதார நடைமுறையினை தற்போது நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்களோ, அதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் எமது பிரதேசம் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் தென்னிந்தியாவிலிருந்து வடபகுதிக்கு சட்டத்துக்குப் புறம்பாக வருவோர் மற்றும் பொருள்களைக் கடத்தி வருவோர் தொடர்பிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் – என்றார்.