பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 419 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் மற்றும் திருநகர் பகுதிகளே தற்போது முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் முடிவுகளைப் பொறுத்து முடக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
இதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பின்படி தூர இடங்களுக்கான போக்குவரத்து தற்பொழுது வழமைக்குத் திரும்பியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக அத்தியாவசியமான தேவையுடையோர் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், தற்போது மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக வர்த்தகர்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யச் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, அவ்வாறு செல்பவர்கள் மிகவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படவேண்டும்.
குறிப்பாக மேல் மாகாணத்திற்கு செல்பவர்கள் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
இதேவேளை, அரசாங்கத்தினால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான உணவுப் பொதி அவர்களுடைய வீடுகளுக்குக் கொண்டு சென்று கையளிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே, அடையாளம் காணப்பட்டவர்களுக்கு ஏழு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, ஓரு கிழமைக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் இரண்டு கிழமைகளுக்கு அவர்களுக்குரிய உணவுப் பொதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.