Ad Widget

மேல் மாகாணத்தில் நீக்கப்பட்டது ஊரடங்கு – பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, டேம் வீதி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், கரையோர பிரதேசம், ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோஇ அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல,, சபுகஸ்கந்தை ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய காவற்துறை அதிகார பிரதேசங்களிலும் வேகட – மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் – குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் குளியாப்பிட்டி, மாவனெல்ல, ருவான்வெல்ல ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் தொழிலுக்காக அந்த பகுதிகளில் இருந்து வெளியில் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் எவரும் உட்பிரவேசிக்கவோ, அல்லது வெளியேறவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என பொலஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

எனினும் தனிமைப்படுத்திய பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியனவற்றில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts