யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல்- பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள வளங்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதன் போது , யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல் – பாவனையின்றி காணப்படும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த காணிகளுக்கு ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் போலி உறுதிகளை தயாரிக்கும் கும்பல் அக்காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என அறிகிறேன்.
எனவே இது தொடர்பில் பிரதேச செயலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவில் உள்ள பயன்பாடற்ற , வாழ்வாதாரத்தை அதிகரிக்க கூடிய அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பிலான விவரங்களை திரட்டுமாறும், காணிகளை அடையாளம் காண்பதில் உள்ள தடைகளை இனம் கண்டு அவற்றினை நீக்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலர்களுக்கு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தினார்.