யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21) மாலை இடம்பெற்றுள்ளது , வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயும் மகளும் மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு முன் வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடைக்கான உயரத்தில் வேகத்தை குறைத்தவேளை திடீரென அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவர்களை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக தப்பியோடியுள்ளனர். அதன்போது பெண்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவ்வேளை நீதிபதியின் வீட்டுக்கு காவலுக்கு நின்ற பொலிசார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு அனுப்பி வைத்ததையடுத்து அவர்கள் இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். அண்மைக்காலமாக ஆங்காங்கே வழிப்பறிக்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பட்டப்பகலில் நீதிபதியின் வீட்டுக்கு முன்னால் பொலிசார் காவலுக்கு நின்றிருந்த நிலையில் கூட இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்களில் உடனடியாக செயற்பட்டு தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதில் காட்டப்படும் அசமந்தமும் பொலிசாரின் பாதுகாப்பு குறைபாடுகளும் மக்கள் வீதியில் சுதந்திரமாக நடமாடுவதற்கே அச்சப்படும் நிலையை தோற்றுவித்துள்ளது.