வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட சில இடங்களே முடக்கப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதியில் கொரோனா இல்லை என்று அர்த்தப்படுத்த முடியாது.
அதே போன்று தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்தும் நாம் அறிவித்துள்ளளோம். அவை பின்பற்றப்பட வேண்டும்.
அதே போன்று நிறுவனமொன்றில் வேலைக்கு வரும் நபர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தாது நிறுவனத்திற்கான தனிப்பட்ட போக்குவரத்து முறையொன்றை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக பாதுகாப்பாக செயற்படலாம்.
அதேபோன்று ஊழியர்களிடையே சமூக இடைவெளியை பேணுவதும் முக்கியமான ஒரு விடயமாகும். மேலும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்களில் ஒன்றாக இணைந்து உணவருந்துதல் தொற்றுப் பரவலுக்கு காரணமாக இருக்கலாம்.
எனவே உணவகங்களில் உணவுகளை வாங்கினாலும் தனியாக இருந்து உணவருந்துதல் தொற்றுப் பரவலைத் தவிர்க்கும். அதே போன்று பொருட்களை கொள்வனவு செய்கின்ற போது அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு நடந்து செல்வது பொருத்தமானது.
மேலும் வேலைக்கு செல்பவர்கள் உங்களிடம் மோட்டார் சைக்கிள் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் சனநெரிசல் குறைந்த நேரத்தில் பயன்படுத்துங்கள்.
அதே போன்று உங்களில் ஒருவருக்கு சளி, தொண்டை வலி, அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு அறிவித்து பரிசோதனையொன்றை மேற்கொள்ளுங்கள்.
இதன் ஊடாக தொற்று இருப்பின் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம். அதே போன்று உங்களில் இருந்து மற்றுமொருவருக்கு நோய் தொற்றுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.