யாழில் ஐந்நூறு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொரோனா நிலைவரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும்கூட அபாயமான சூழல் விலகவில்லை. எனவே. அனைவரும் கவனமாகச் செயற்பட வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28இல் இருந்து தற்போது 18ஆகக் குறைவடைந்துள்ளது. பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், யாழ். மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன், அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் நீண்டதூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விபரங்களை சுகாதாரப் பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும்.

தேவைப்படின், அவர்களுக்குரிய PCR பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts