Ad Widget

11 வது தமிழ் இணைய மாநாடு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 இன்று 28.12.2012 ஆரம்பமாகியுள்ளது . 

உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் டிசம்பர் 28 முதல் 30 வரை “உலகத் தமிழ் இணைய மாநாடு 2012”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.

உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் டிசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் டிசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.  மாநாட்டின் கருத்தரங்குக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். கருத்தரங்கில் “செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட உள்ளது.  இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மற்றும் உலகின் பல இடங்களில் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் வலமைபோல் இந்த இணைய மாநாட்டிலும் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது.  கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார்.

மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெறுகிறது:

  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
  • கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்

IMG_0763 IMG_0753 551793_565123283505079_2032644507_n 551666_565115843505823_1296978378_n 207812_565106003506807_1339645902_n IMG_0769 71678_565106270173447_451601434_n IMG_0735 314535_565116563505751_1323071427_n 309431_565112560172818_1235162959_n IMG_0735

Related Posts