கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த இ.போ.ச பேருந்தில் பயணித்த ஒரு சிலரே தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் ஏனையவர்களும் தம்மை அடையாளப்படுத்துமாறு மாகண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கேட்டுள்ளதாவது,
புத்தளத்திலிருந்து – கொடிகாமம் வந்து பின்னர் பருத்துறைக்கு சென்ற இ.போ.ச பருத்துறை சாலைக்கு சொந்தமான ND 9776 இலக்க பேருந்து கொடிகாமத்தில் நிறுத்தப்பட்டபோது கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் 15 தொடக்கம் 20 பேர் கொடிகாமம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
மிகுதி பயணிகளுடன் பருத்துறை நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்தவர்கள் கரவெட்டி, துன்னாலை, நெல்லியடி, பருத்துறை பகுதிகளில் இறங்கியிருக்கின்றனர். இந்நிலையில் சிலர் சுகாதார பணிமனையின் 021 222 6666 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஏனையோரும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தங்களை அடையாளப்படுத்துமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.