நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இணங்காணப்படவில்லை.

இது போன்று சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மக்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றோம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

குறித்த பெண் சிகிச்சை பெற்று வந்த கம்பஹா வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் 15 பேர் மற்றும் குறித்த பெண் தொழில் புரிந்த தனியார் நிறுவனத்திலுள்ள 40 பேர் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் நிவைலயங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாத்திரமின்றி குறித்த பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிய ஏனைய நபர்களை இனங்காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு , இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பிலும் ஆராயப்படுகிறது.

ஆடை தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகவே இந்த பெண் தொழில் புரிந்துள்ளார். அவர் பணியாற்றிய தொழிற்சாலைக்குரிய பேரூந்தில் வீட்டிற்கும் தொழிற்சாலைக்கும் மாத்திரமே இவர் பயணித்துள்ளார். பேரூந்தில் பயணித்த ஏனைய நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இந்த பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று இனங்காணப்படவில்லை.

அது தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் அதனை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கும். அதற்கமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படக் கூடும் என்பதால் மக்களை அனைவரையும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றோம் என்றார்.

Related Posts