வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகயின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கமைய, தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts